ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட ஊராட்சி பற்றி, முழு தகவல்களுடன் வெளிவந்துள்ள நுால். ஐந்து பகுதிகளாக பிரித்து எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும், அந்த தலைப்பு சார்ந்த தகவல்கள், கட்டுரையாக இணைக்கப்பட்டுள்ளன.
முதலில், ஊராட்சி ஒன்றியங்களின் வரலாறு பற்றி வரையப்பட்டுள்ளது. அடுத்து, நிர்வாக பணியாளர் அமைப்பு முறை, ஒன்றியத்தின் கடமைகள், ஊராட்சி ஒன்றிய மக்கள் பிரதிநிதிகளின் கடமைகள் என, சட்டப்படியான தகவல்கள் அடங்கியுள்ளன. முதல் பகுதியின் இறுதியில், மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் விபரங்கள் தரப்பட்டுள்ளன.
அடுத்த பகுதி, மாவட்ட ஊராட்சியின் அமைப்பு பற்றி பேசுகிறது. இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டதன் சட்டம் மற்றும் வரலாற்று பின்னணி எல்லாம் தரப்பட்டுள்ளது. மூன்றாவது பகுதியில், ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி அளவில், வளர்ச்சி திட்டங்கள் தயாரிப்பது பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
அடுத்து, தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளை கட்டுப்படுத்தும் விதிகள் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக, ஒப்பந்தம், பொது நிதி மேலாண்மை பற்றிய விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
முழுதும் சட்டப்பூர்வ தகவல்களைக் கொண்டுள்ளது. உள்ளாட்சி உறுப்பினர் தேர்தல் முடிந்துள்ள நிலையில், முறையாக செயல்படுவதற்கு உதவும் நுால். மக்களாட்சியை மேலும் பரவலாக்கும் வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.
– மலர்