சைவ சித்தாந்தத்தையும், அதன் பொருள் நுட்பத்தையும் விளக்கும் நுால். இறை அரங்கமும் திரை அரங்கமும் துவங்கி, ஏழு- தலைப்புகள் சைவ சித்தாந்தத்தையும் திரைப்படத்தையும் ஒப்பிட்டுக் கூறுகின்றன. பல திரைப்படப் பாடல்களில் சைவ சித்தாந்த கருத்துகள் இடம் பெற்றுள்ளன என்பதை தக்க சான்றுகளுடன் இந்த நுால் விளக்குகிறது. சைவ சித்தாந்தத்தை தெரிந்து கொண்டால் இறைவனைப் பற்றிய தெளிவை அறியலாம்.
உலகம் நிலையற்றது. மீண்டும் பிறப்பு உண்டு என்பதை, ‘போனால் போகட்டும் போடா; இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவன் யாரடா...’ என்ற திரைப்பாடல் மூலம் விளக்கியிருப்பது அருமை. இறைவன் ஆடிய அரங்கம் என்று ஐந்து அம்பலங்களும், ஐந்து சபைகளும் நடன வகைகளை விரிவாக விளக்கியுள்ளது.
இறைவனின் ஐந்தொழில்கள் பற்றியும் விளக்கம் தருகிறது. திரைப்படப் பாடல்களை தேர்ந்தெடுத்து, உலகம் நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை போன்றவற்றை விளக்கிச் சொல்கிறது. சிவனைப் பற்றிய செய்திகளை சுவை தோன்றுமாறு சொல்கிறது.
– பேராசிரியர் இரா.நாராயணன்