ஆனந்த போதினியும், ஆரணி குப்புசாமி முதலியாரும் என்ற முதல் கட்டுரையைப் படித்ததும் பத்திரிகை, துப்பறியும் நாவல் துறையில் ஆர்வம் உள்ளவர்களையும் இழுத்துப் பிடிக்கிறது. ஆய்வு நடையில் வெளிப்படுத்தாமல் வெகுஜன நடையில் வெளிப்படுத்துகிறது. அந்தக் காலத்தில் தமிழ் எழுத்துகள் எப்படி இருந்தன என்பதை அறிந்துகொள்ளும் வகையில் படமாகவும் தந்துள்ளார்.
அந்தக் கால தீபாவளிப் படங்கள் என்னும் கட்டுரையில், ஆர்யமாலா, மீரா, வித்யாபதி, ருக்மாங்கதன், கஞ்சன், கன்னிகா, ராஜா விக்கிரமா போன்ற வெற்றிப் படங்களைப் பட்டியலிட்டு வெற்றிக் காரணங்களை எடுத்துரைத்துள்ளார்.
அந்தத் திரைப்பட விளம்பரங்களையும் அழகிய படங்களாக வெளியிட்டுள்ளார். மூன்று தீபாவளியைக் கண்ட எம்.கே.தியாகராஜ பாகவதரின் ஹரிதாஸ் பற்றி விளக்கமாக எழுதியுள்ளார். சாரட் வண்டியில் பாகவதருக்கு ஏற்பட்ட விபத்தும், லட்சுமிகாந்தன் கொலை வழக்கும் இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்தன என்று குறிப்பிட்டு, வேறு காரணங்களையும் விளக்கியுள்ளார். அந்தக் கால திரைப்படங்கள், நாடகங்கள் வரலாற்றை அறிந்து கொள்வதற்கான புத்தகம்.
– முகிலை ராசபாண்டியன்