சமுதாய, அரசு, சமய விழாக்களில் கூத்தும் இசைக்கருவிகளும் இன்றியமையாமை என ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நுால். சங்க காலத்தில் நிகழ்ந்த திருமணம், மங்கலச்சடங்குகள் போன்றவற்றை விரிவாக ஆராய்கிறது. ஊர் சார்ந்த விழாக்களாகப் பொதுவெளியில் நிகழ்த்தப்பெறும் ஏறு தழுவுதல், புனல் விளையாட்டு, தைநீராடல் போன்றவை சங்க இலக்கியச்சான்றுகளோடு சுட்டிக்காட்டப்பட்டு உள்ளன.
அரசு விழாக்களில் நாண்மங்கலம், உண்டாட்டு, களவேள்வி, போர்வெற்றி குறித்து எடுக்கப்படும் வெற்றி விழா, நடுகல் வழிபாடு முதலியன எடுத்துரைக்கப்பட்டுள்ளன. சமய விழாக்களில் இந்திர விழா, கார்த்திகை திருவிழா, வேலன் வெறியாடல், திருவோண விழா முதலியனவற்றைச் சங்க இலக்கிய தரவுகள் கொண்டு ஆராய்கிறது.
சங்க காலத்தில் இடம்பெற்ற கூத்து வகைகள், இசைக்கருவி வகைகள் முதலியன பற்றி விரிவான விளக்கங்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இறைவனோடு தொடர்புடைய விழாக்கள், திணைகளில் கொண்டாடப்படும் கூத்தும் இசையும் பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. சங்க காலத் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்பை விளக்கும் நுால்.
– ராம.குருநாதன்