இருபத்து மூன்று பெண்களை மையப்படுத்திய 23 கதைகள். எடுப்பும் முடிப்பும் இயல்பாக இருப்பதால் வாழ்க்கை வரலாறு போல் உள்ளது. பெண்கள் எப்போதுமே பக்குவம் பெற்றவர்கள் என்பதை உணர்த்தியுள்ளார்.
மைதிலி எடுத்த முடிவைத் தான் அவள் தந்தை எடுக்கிறார். ஆனால் அந்த முடிவை அவள் எடுக்காதது போன்ற தன்மையை அந்தப் பெண் வெளிப்படுத்த வேண்டும் என்று நினைக்கவில்லை என்றாலும் வெளிப்பட்டுவிடுகிறது. சந்தேகக் கணவனின் தாக்குதலுக்கு அடிபணியும் பெண்ணாக இருந்த மைதிலி, எதிர்காலச் சந்ததியின் வாழ்க்கைக்கு ஒளியேற்றியுள்ளாள்.
இப்படி, 23 பெண்களை அறிமுகம் செய்து அவர்களின் அறிவுக் கூர்மையையும் வாழ்வை எதிர்கொள்ளும் தைரியத்தையும் எல்லோருக்கும் பயன்படும் வகையில் தந்துள்ளார். ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பெண்கள் ஒவ்வொருவரும் சமூகத்தை முன்னெடுத்துச் செல்லும் தகுதி பெற்றவர்கள் என்பதை எளிய நடையில் உணர்த்தியுள்ளார்.
பெண்ணின் பெருமையை உணர்த்துவதற்கு சங்க காலத்திற்கும், காப்பிய காலத்திற்கும் போகவேண்டாம்; தற்காலத்திலும் இருக்கின்றனர் என்பதை வெளிப்படுத்தும் நுால்.
– முகிலை ராசபாண்டியன்