ஜெக கீதை என்பது ஒரு விளையாட்டுச் சரக்கல்ல; நகைப்பதற்கும் கதைப்பதற்கும் பொருள் அல்ல. ஒரு நொடியில், நொடியை 100 பங்காக்கி, அந்த 100 பங்கில் உள்ள ஒன்றை, 1,000 பங்காக்கி பயன்படுத்தினால் இந்த உலகத்தையே மாற்றலாம் என பதிவு செய்துள்ள நுால்.
ஈஸ்வரன் மேல் பற்று கொண்டு, பஞ்சாட்சர ஜெபத்தின் மீது யார் அக்கறை கொண்டுள்ளனரோ, அத்தனை பேரும் அமானுஷ்ய நிலையில் எல்லாம் வல்ல பரம் பொருளை நோக்கி ஜெபித்தால் நாட்டின் தீமைகள் விலகும்; பகைகள் நீங்கும்; அன்பு மலரும்; ஆன்மநேய ஒருமைப்பாடு மலரும் என்று பதிவு செய்துள்ளார்.
சகுண பிரம்ம வழிபாடு மிக உயர்ந்தது; இதனால் மனிதனின் மனம் செம்மையாக்கப்படுகிறது; ஜீவகாருண்யம் கற்பிக்கப்படுகிறது; உறவுகள் மதிக்கப்படுகின்றன எனவும், வியாசரின் மகாபாரதத்தில் பகவத் கீதை, பீஷ்மர் கீதை, குரு கீதை என மூன்று கீதைகள் உள்ளன எனவும் குறிப்பிடுகிறார்.
ஒழுக்க கடப்பாடுகளையும், இறை வழிபாட்டு முறைகளையும் விளக்குகிறார். கீதாபதேச சாரங்களை காண முடிகிறது. இறையன்பர்களுக்கு ஏற்ற நுால்.
– புலவர் சு.மதியழகன்