வித்தியாசமான குறுங்கதைகளின் தொகுப்பு நுால். தமிழில் புதிய உத்தியுடன், மிக நுணுக்கமாக படைக்கப்பட்டுள்ளது. தொகுப்பில், 100 கதைகள் இடம் பெற்றுள்ளன.
சாதாரணமாக வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தும் வண்டு, வாசகம், கொலை, சொல், கப்பல், மூப்பு, கல், கண் போன்ற சொற்களை தலைப்பாகக் கொண்டு கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
மினுங்கும் பட்டு போல மென்மைமிக்க வண்ணமய சொற்கோர்வையால் மிளிர்கின்றன. அவை, கருத்தை, உணர்வை, கனவை, நம்பிக்கையை உள்வாங்கி, மனதில் விதைக்கின்றன.
எதிர்பார்ப்புள்ள சம்பவங்களாலோ, பூடகங்களாலோ கதைகள் துவங்கவில்லை. அதிரடியாக நெடுஞ்சாலையில் அதிவேகம் எடுத்து பாயும் பந்தயக் கார்கள் போல் கடந்து செல்கின்றன. தொழில் நுட்ப வேகத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. எளிமையாக சுலபமாக கடந்து செல்லும் வகையில் கவனமாக எழுதப்பட்ட குறுங்கதைகளின் தொகுப்பு நுால்.
– மலர்