பதினேழாம் நுாற்றாண்டில் வாழ்ந்து மதுரைக்குப் பெருமை சேர்த்த மதுரைவீரன் பற்றி மீள்பார்வையாக வெளிவந்துள்ள நுால். காசியில் பிறந்து பொம்மண சீமையில் வளர்ந்து, திருச்சியில் புகழ்பெற்று மதுரையில் தெய்வமான மதுரை வீரனுக்கு மதுரையில் எண்ணற்ற சிலைகள் உள்ளன. திருமலை நாயக்கர் காலமே மதுரைவீரன் காலம் என்பதாகக் கூறி, சான்றாகப் பல தகவல்களும் கூறப்பட்டுள்ளன.
பாளையக்காரன் பொம்மண்ணன் மகள் பொம்மியைக் காதலித்து திருச்சியை ஆண்ட விஜயரங்க நாயக்கர் படையில் வீரராகச் சேரும் மதுரை வீரன், வெள்ளையம்மாளைக் காதலித்த குற்றத்திற்காக கொல்லப்பட்ட பின் பொம்மியும், வெள்ளையம்மாளும் உடன்கட்டை ஏறியது வாய்மொழி வரலாறு.
மதுரைவீரனைப் பற்றிப் பல்வேறு கதைகள் உலவிய நிலையில், புலவர் புகழேந்தியின் மதுரை வீர சுவாமி கதை 1979ல் வெளியிடப்பட்டுள்ளதும் 1875ல் சுந்தர முதலியார் மற்றும் 1887ல் அருணாச்சல முதலியார் எழுதிய மதுரை வீர சுவாமி கதைப் பதிவு மக்களால் ஏற்கப்பட்டதும் தெரியவருகிறது.
மதுரைவீரன் மீது இயற்றப்பட்ட மதுரைவீரன் அம்மானை, வீரையன் அம்மானை, மதுரைவீர சுவாமி பராக்கிரமம், மதுரைவீரன் நாடகம், மதுரை வீரையன் நாடகம் போன்றவற்றைப் பற்றிய குறிப்புகள் தரப்பட்டுள்ளன.
மதுரைவீரன் தெய்வமான பின், அனைத்து ஜாதியினரும் குலதெய்வமாகக் வழிபட்டு வருவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அருந்ததியர் வீரன் தெய்வமானதை ஏற்றுக்கொள்ள முடியாத மேட்டிமையோரால் திரித்து எழுதப்பட்ட மதுரைவீரன் கதைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. பிற்காலத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுத் தரப்பட்ட தெளிவுகளும் விவரிக்கப்பட்டுள்ளன.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு