மேன்மையான வாழ்க்கை எது? அதை எவ்வாறு அடைவது என வழிகாட்டி, அறத்தை போதிக்கும் குறட்பாக்கள் தமிழில் ஏராளம். அவை ஒன்றுக்கொன்று அழகானவை; ஆழமானவை; விசாலமானவை.
திருக்குறள் துவங்கி திருமந்திரம், ஏலாதி, திரிகடுகம், நான்மணிக்கடிகை, ஆசாரக்கோவை, நாலடியார், பழமொழி நானுாறு என மனிதனை நெறிப்படுத்தும் பல்வேறு நுால்களில் தேர்ந்து, ஒவ்வொரு செயலுக்கும் அவை உணர்த்தும் சிந்தனையை, அறிவுறுத்தும் எதிர்வினையை ஒப்புமைப்படுத்தி சொல்லி உள்ளார் நுாலாசிரியர்.
மொத்தம் 33 தலைப்புகள். உணவு உண்பது துவங்கி உறவுகளை எப்படிக் கையாளுவது வரை என அவற்றை அழகாய் பகுத்து, வாசகர்கள் எளிமையாய் புரியும் வண்ணம் விளக்க உரையோடு தந்துள்ளார். இவற்றை வாசிக்கையில், அதிகம் புழங்காத அருந்தமிழ்ச் சொற்களும், சொற்கட்டும் பெரும் புதையலைப் போல் விரிகிறது.
இலக்கியங்கள் மாணவர்களின் மனப்பாடத்திற்கானது மட்டுமன்று; அனைவருக்குமான வாழ்வியல் சூத்திரம் என்பதை, இந்தப் புத்தகம் வாசிக்கையில் உணர முடியும்.
– பெருந்துறையான்