புகழ் பெற்ற, ‘மேயர் ஆப் தி காஸ்டர் பிரிட்ஜ்’ என்ற ஆங்கில நாவல் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. குடியால் மனைவியை விற்று, வாழ்க்கையில் இன்ப, துன்பங்களை அனுபவித்தவனுடைய கதை இது.
ஆவலைத் துாண்டும் வகையில் விறுவிறுப்பாக உள்ளது. மைக்கேல் ஹெஞ்சார்ட், சூசான், எலிசபெத் ஜேன், பார்ப்ரே, லுஸட்டா, நியுஸான் ஆகியோரைச் சுற்றியே கதை நிகழ்கிறது. ஹெஞ்சார்ட் போதையில் மாலுமியான நியுஸானுக்கு மனைவி சூசானை விற்றுவிடுகிறான்.
மாலுமிக்கும், சூசானுக்கும் குழந்தை பிறக்கிறது. அவள் தான் எலிசபெத் ஜேன். கடல் புயற்காற்றில் நியுஸான் இறந்துவிட்டதாக எண்ணிய சூசான், எலிசபெத் ஜேனை அழைத்துக்கொண்டு, பழைய கணவன் ஹெஞ்சார்ட்டைத் தேடிக் கண்டுபிடிக்கிறாள். அவன் ஏற்றுக்கொள்கிறான்.
சூசான் இறந்து விட்டதாக எண்ணிய அவன், லுஸட்டா என்ற பணக்காரப் பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து பிரிந்தவன். தனக்கு ஏற்பட்ட தொழில் நட்டத்தை மீட்க, எல்லா வகையிலும் உதவியாக இருப்பவன் பார்ப்ரே.
ஹெஞ்சார்ட் நொடிந்த நிலையிலும், நட்பு பாராட்டுகிறான் பார்ப்ரே. எல்லா வகையிலும் தாழ்ந்து விட்டதாக எண்ணித் தொழிலில் முன்னேறி, மேயர் அளவுக்கு உயர்ந்துவிட்ட பார்ப்ரே மீது பொறாமை கொள்கிறான்.
அவனைக் கொல்லும் அளவுக்குப் பகை வளர்கிறது. அதற்கு காரணம், காதலித்து மணந்த லுஸட்டாவை, அவன் மறுமணம் செய்து கொண்டதும், மகளாக நினைத்துக் கொண்டிருக்கும் ஜேன், பார்ப்ரேவைக் காதலித்ததும் என தெரியவருகிறது. இறந்து விட்டதாகக் கருதிய நியுஸானால் உண்மை தெரியவருகிறது. எளிய நடையில் அமைந்துள்ள நாவல்.
– ராம.குருநாதன்