கிரைம் நாவல்கள் எழுதி பிரபலமான எழுத்தாளர் ராஜேஷ்குமார், ஆன்மிகம் பற்றி எழுதியுள்ள நுால். சித்தர்கள் வாழ்வில் புகுந்து திடுக் திடுக் எழுத்து நடையைக் காட்டியுள்ளார். உடல் ஆரோக்கியத்திற்கு காரணம் சாப்பிடும் உணவு அல்ல; இழுத்து விடும் மூச்சுக் காற்று தான் என்பது சித்தர்கள் கருத்து.
ஒரு ஆமை ஒரு முறை மூச்சு இழுத்தால், ஒரு மணி நேரம் வரை அடக்கி வைக்கும் ஆற்றல் பெற்றது. அதனால் தான் அதன் ஆயுள் 500 ஆண்டுகளை தாண்டியுள்ளது என கண்டறிந்துள்ளது விஞ்ஞானம். இந்த உண்மையை மெய்ஞானமாக கண்டுபிடித்தது சித்தர்கள். பழநி மலை ஆண்டியை படைத்தவர் போகர் என்பது தெரியும். கோரக்கர் இயற்றிய சதுரகிரி மகாத்மியம் அதற்கு சாட்சி சொல்கிறது என எடுத்துக் காட்டியுள்ளார்.
இயற்கையின் ஆதார சுருதியை ஆராய்ந்தவர்கள் சித்தர்கள். சித்தம் அடக்கத் தெரிந்ததால் தான் அவன் சித்தன். தாய் வயிற்றில் கரு உருவாகும் போது அதன் குணமும் முடிவாகி விடுவதாக இன்றைய ஆய்வு சொல்கிறது. இதை, திருமூலர் பாட்டின் வழி விவரித்துள்ளார்.
செம்பு உலோகம் கலக்காமல், தங்கத்தில் சிலை செய்ய முடியாது என்ற உண்மையை போகர் சொல்லும் விதத்தை அருமையாக விளக்கியுள்ளார். போகர் திருமேனி சிலை பழநியாண்டவர் கோவிலில் உள்ளது.
அவரது சீடர் கருவூரார் சிலை தஞ்சை பெரிய கோவிலில் உள்ளது. சித்து செய்பவர்கள் அல்ல சித்தர்; சித்தர்கள் வாழ்க்கை நெறிகளை படைத்து காத்தவர்கள் என்ற தகவல்களை விறுவிறுப்பாக எழுதியுள்ளார். ஆன்மிகப் புதையலாக அமைந்து உள்ள நுால்.
– சீத்தலைச் சாத்தன்