எட்டு சிறுகதைகளின் தொகுப்பு நுால். மாடித் தோட்டத்தின் அவசியம், இயற்கை உரம் ஊட்டச்சத்து இடுவதால் ஏற்படும் நன்மை, பூச்சி மருந்தால் ஏற்படும் பக்க விளைவுகளை, ‘மாடித் தோட்டம்’ கதை உணர்த்துகிறது.
‘தரும அடி’ கதை, பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்ட தந்தையின் மன வேதனையை பகிர்கிறது. பிள்ளைகளை ஒழுங்காக வளர்க்காத பெற்றோரின் அணுகுமுறையை சொல்கிறது.
காதல், திருமணம், குற்றம், கனவு என, ‘கனவுச்சங்கிலி’ கதை விறுவிறுப்பாக உள்ளது. சமூக பொறுப்பின்மையால் தனக்கு பிரச்னை என்று வரும்போது, திசை திருப்ப முயலும் மக்களின் மனதை, ‘கூகுள் மேப்பில் மூசா தெரு’ படம் பிடித்து காட்டுகிறது.
கொரோனாவால் வாழ்வு இழந்து, நல்ல காலம் பிறக்காதா என புலம்பும் ஜோசியக்காரரின் மனக்குமுறலை, ‘கூண்டுக்கிளி’ கதை பரிதாபமாக உரைக்கிறது. உணர்வு, கேலிப்பேச்சு, தனிமை, அன்பு என, சக மனிதர்களை புரிந்து கொள்ளும் உணர்வுகளுடன் கதைகள் நகர்கின்றன. புதிதாக எழுத துடிப்போர் வாசிக்க வேண்டிய நுால்.
– டி.எஸ்.ராயன்