கிராமத்து மண்ணையும், அதில் வாழும் மக்கள் வாழ்க்கை முறையையும் படம் பிடித்துக் காட்டும் வகையில் எழுதப்பட்டுள்ள நாவல். இந்த நுாலின் ஆசிரியர் பிறந்து வளர்ந்த தேனி மாவட்ட மல்லிங்காபுரம் கிராமத்தில் வாழும் கதாபாத்திரங்கள் முருகேசன், முத்துக்கருப்பன், சீனித்தாயி, தொரைச்சாமி, மொக்கைச்சாமி, இருளாயி போன்ற மாந்தர்களை மையப்படுத்தி விறுவிறுப்பு குறையாமல் தரப்பட்டுள்ளது.
அப்பகுதியில் நிலவும் பழக்க வழக்கங்கள், ஆற்றாமை, துணிச்சல், அறச்சினம், உவகை என, பல விஷயங்களை கலந்து ஒலிச்சித்திரம் கேட்பதைப் போல் பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தகத்தின் மொழி நடை, அந்த வட்டாரத்தை அப்படியே தத்ரூபமாக படம் பிடித்து நிற்கிறது. கிராமத்தில் கடைப்பிடிக்கும் சடங்குகள், வழிபாடு, காவல் நிலைய கலாட்டா, பலகாரம் சுடல் என ஒவ்வொரு நிகழ்வும் மிகவும் ஆழமாகவும், நுணுக்கமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட மண் சார்ந்த கிரகிப்பையும், தேடலையும் பறைசாற்றும் வகையில் உள்ளது. கிராமத்தில் வளரும் பெயர் தெரியாத செடி, கொடிகள், ஊர்வன, பறப்பன என உயிரினங்கள், கரியேறிய அலுமினிய வட்டிகள், பித்தளைக் கும்பா, திருக்கைக் கல், சலங்கை பொருத்திய உரல்கள், அரிக்கேன் லாந்தர், வடகமாய் காய்ந்த தோல் செருப்பு என பொருட்களோடு மக்களுக்கு இருந்த பரிட்சயம் மங்கி வருவதை பதிவு செய்துள்ளது. நாவலின் ஒவ்வொரு பக்கத்திலும் மண் வாசனை கமகமக்கிறது.
– சையது