சித்தர்களின சிறப்பு என்ற தலைப்பு துவங்கி, அவ்வை ஞானக்குறளுடன் நிறைவடையும் நுால். இடைக்காட்டுச் சித்தர், அகப்பேய்ச் சித்தர், அகஸ்தியர் ஞானம், காகபுசண்டர் சிவவாக்கியர் போன்ற சித்தர்களின் வரலாறு, பாடிய பாடல்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. பதினெண் சித்தர் பெயரால் மருத்துவ நுால்களும் அறிவுரைப் பாடல்களும் வழங்கி வருவதை குறிப்பிடுகிறது.
பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் இனியது. எளிய சந்த நயமுள்ளவை. சித்தர்கள் எல்லாம் வல்லவர்கள். அவர்களால் எதையும் செய்ய முடியும் என்று பேசுகிறது. சினத்தையும், மனத்தையும் அடக்க வேண்டும் என்றார் இடைக்காட்டு சித்தர். அகப்பேய்ச் சித்தர் மனத்தையே பேயாக உருவகம் செய்து பாடியுள்ளார். தன்னை அறிய வேண்டும். இயல்பை, ஆற்றலை உணர வேண்டும். தன்னை அறிந்து தீய நெறியில் சேராமல், உண்மை நெறியில் சேர வேண்டும் என்பது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வையார் பாடியது ஞானக் குறள். இறைவன் எங்கும் இருப்பவன். அச்சத்தையும், அகங்காரத்தையும் விட்டவர்களால் அவனைக் காண முடியும் என்ற ஆழமான கருத்து கூறப்பட்டுள்ளது.
– புலவர் இரா.நாராயணன்