எழுத்தாளர் பு.சி.ரத்தினம் எழுதிய பயண இலக்கிய உள்ளடக்கத்தை ஆராயும் நுால். உள்நாடு மட்டுமின்றி, வெளிநாட்டு பயண அனுபவ விபரத்தையும் வெளிக்கொண்டு வந்துள்ளது. உலகின் பல பகுதிகளில் வாழும் மக்கள் பண்பு, மொழி, நாகரிகம், கலாசாரம், பண்பாடு, சுற்றுச்சூழல், சுகாதாரம், அரசியல், வரலாறு, இலக்கியம் போன்றவற்றில் இருந்து தகவல்களை எப்படி படைப்பாக்கியுள்ளார் என்பதை ஆராய்கிறது.
ரத்தினம் எழுதிய, 32 நுால்கள் குறித்தும், விருது பெற்றவை குறித்தும் அலசுகிறது. தமிழில், 1988 முதல் 2008ம் ஆண்டு வரை எழுதப்பட்ட, 600 பயண நுால்களை வகைப்படுத்தி பட்டியலிட்டதில், எழுத்தாளர் ஜான் மார்டாக் எழுதியது தான் உன்னதமாக விளங்கியதாக பதிவாகியுள்ளது.
அரண்மனை, கோவில் தோற்றம், கட்டடக்கலை, துாண்கள், ஓவியம் போன்றவை, பழமை மாறாமல் பாதுகாக்கப்படும் விதம் பற்றி சிறப்பு அம்சங்களை தருகிறது. சிலருக்கு உடல் ஒத்துழைக்கும்போது, பொருளாதாரம் கைகொடுப்பதில்லை; பொருளாதாரம் கைகொடுக்கும் போது, உடல் ஒத்துழைப்பதில்லை என, பின்புலம் இல்லாத படைப்பாளிகள் பற்றிய கவலையை வெளிப்படுத்துகிறது. பயணத்தை படைப்பாக்க துடிப்பவர்களுக்கு வழிகாட்டும் நுால்.
– டி.எஸ்.ராயன்