நினைவுகளை அசை போட வைக்கும் நுால். 112 தலைப்புகளில் மனதில் பதிய வைக்கிறது. முன்னோர், உடலை பேணிய விதத்தை, ‘இந்த வயசுல இதெல்லாம் தேவையா’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரை உணர்த்துகிறது. கூட்டம், கூண்டு என பேசும் அரசியல் தலைவர்களை நினைக்க வைக்கிறது.
பொது இடங்களில் பிறருக்கு சுமையாக இருக்கக் கூடாது என்பதை, ‘பஸ்சில் வாந்தி’ என்ற கட்டுரை உணர்த்துகிறது. படிப்படியாக மறைந்து வரும், கிராமத்து விளையாட்டுகளைச் சுட்டி, ஆதங்கப்பட வைக்கிறது. நரிக்குறவர் மக்களிடம் ஏற்பட்டுள்ள வளர்ச்சி பிரமிப்படைய வைக்கிறது.
ஒவ்வொரு தலைப்பிலும், பாசம், ஆறுதல், நட்பு, உறவு, பித்தலாட்டம், நாடகம், குறுக்கு வழி, மூட நம்பிக்கை, மனிதாபிமானம் போன்ற பண்புகள் நிறைந்துள்ளன. எளிய மொழி நடையில் உள்ளது. இப்படியெல்லாம் நடந்ததா என எண்ணத் துாண்டுகிறது. ஏதோ ஒரு வகையில் தொடர்புள்ள செய்தி என மலைப்படைய வைக்கிறது.நிகழ்வுகளை நினைத்து பார்க்கத் துாண்டும் நுால்.
– டி.எஸ்.ராயன்