பாரத விஞ்ஞானிகள், தொல்லியல் துறையினர் முயற்சியால் மீட்கப்பட்ட வேத கால நாகரிகம் பற்றிய சிறப்பு கட்டுரைகள் அடங்கிய நுால். புதியதும், பழையதுமான செய்திகளைக் கொண்ட 20 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
தியாகராஜ சுவாமிகள், யாக்ஞவல்கியர், சாணக்கியர், கொடுங்கோளூர் பகவதி, பவுத்த சிற்பங்கள், தோரண வாயில்கள், ஆயக்குடி, திரிவேணி சங்கமத்தில் ராமாயண ஓவியங்கள், விடுதலைப் போரில் நாடகமும் திரையும், காதம்பரி, விவேகானந்தர், அரவிந்தர், திலகர், பாரதியார், மனுஸ்மிருதி, ஹர்ஷ்வர்த்தனர் போன்ற தலைப்புகளில் வரலாறும், செய்தியும் விரிவாகத் தரப்பட்டு உள்ளன.
சாணக்கியர், சந்திரகுப்தனை உருவாக்கி, அர்த்த சாத்திரத்தை எழுதி, அரசவையில் 18 மகா மாந்தரை நியமித்தது, வரலாற்றுச் சாதனை என சிறப்பாகப் பதிவிடப்பட்டுள்ளது. கண்ணகியே கொடுங்கோளூரில் பகவதியாக அமர்ந்துள்ளதற்கு, சுந்தரர் தேவாரத்தை சான்றாகக் காட்டுவது சிறப்பு.
நேபாளம், தாய்லாந்து, இந்தியா, பாங்காக் நாடுகளில் புத்த சமய சிலைகளும், ஹிந்து சமய சிலைகளும் சொல்லும் வரலாற்றை ஒப்பிட்டுப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. வேலுார் ஜலகண்டேசுவரர் கோவிலில், சிவலிங்க பிரதிஷ்டை செய்து திறந்துவிட்ட ஆன்மிகப் புரட்சி வரலாற்றை எழுச்சியுடன் எழுதிய விதம் அருமை!
‘சனாதன தர்மம் தான் இந்திய தேசியம். இது குன்றினால், நாடு விழுந்து விடும்’ என்று அரவிந்தர் கூறியது குறிப்பிடப்பட்டுள்ளது. அரவிந்தருடன் விவேகானந்தர், பங்கிம் சந்திரர், திலகர், பாரதியார் ஆகியோரை ஒப்பிட்டு எழுதியுள்ளமை தேசப்பற்றை வளர்க்கும். தேசப் பற்றும், தெய்வப் பற்றும் தரும் ஞானப் புதையல்!
– முனைவர் மா.கி.ரமணன்