சபதத்தில் சாணக்கியர் வெற்றி பெற்று குடுமியை முடியும் காட்சியுடனான நாவலின், இரண்டாம் பாகமாக இடம் பெற்றுள்ள நுால்.
‘பேச்சிலும், சிந்தனையிலும் உணர்ச்சிப் பிரவாகம் இன்றி, நிதானமும், ஆழமான புரிதலும் கொண்டவர் சாணக்கியர். பழி வாங்கும் உணர்வை விட, ஒருங்கிணைந்த பாரதத்தை, யவனர் போன்ற அன்னியர், கொடுங்கோலரிடமிருந்து காப்பாற்ற வேண்டும்’ என்று சாணக்கியர் சொல்லும் கருத்து, நாட்டுப் பற்றுக்கு நல்ல உதாரணமாக விளங்குகிறது.
நேபாளம், காஷ்மீர் மன்னர்களுடன் சேர்ந்து அகண்ட பாரதத்தை உருவாக்க பாடுபடுகிறார் சாணக்கியர். அவரது அறிவுரைகளில், ‘ஒரு கனி கிடைக்க வேண்டுமானால், பல ஆண்டுகளுக்கு முன்னரே மரத்தை நட்டு வைத்திருந்தால் மட்டுமே முடியும்’ என்பது இன்றைய காலத்துக்கும் பொருத்தமாய் உள்ளது. தேசப்பற்று எனும் தாகம் தீர்க்கும் தேனாறாக படைக்கப்பட்டுள்ள நுால்!
– முனைவர் மா.கி.ரமணன்