அன்றாட வாழ்க்கையில், அரிய கருத்துக்களையும் எளிதில் மற்றவர்களுக்கு விளங்க வைக்க பயன்படுத்தும் பழமொழிகளின் தொகுப்பு நுால். வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், துயரங்களைத் துடைப்பதற்கும், பட்டறிவு பெறுவதற்கும் பயன்படுகின்றன. வாழ்வியல் நிகழ்வுகளைக் குறிப்பாகவும், வெளிப்படையாகவும் கருத்துக்களை உணர்த்துகின்றன.
அனுபவ உரைகளைத் தொன்றுதொட்டு பயன்படுத்தி வந்துள்ளனர் மக்கள். அவற்றை நாமும் பயன்படுத்துகிறோம். வருங்கால தலைமுறையினரும் பயன்படுத்துவர். அனுபவ உரைகளில் எதுகை, மோனை இடம் பெற்றுள்ளன. கவிதை நடையிலும், சில பேச்சு வழக்கிலும் அமைந்துள்ளன.
அவற்றில் 5,000 பழமொழிகள் அகர வரிசையில் தொகுக்கப்பட்டுள்ளன. இவை அறிவுரைகளாகவும், இடிப்புரைகளாகவும், ஆத்திசூடி வடிவிலும் அமைந்துள்ளன. வாழ்க்கை நலம், கல்வி, நட்பு, உழவு, மருத்துவம், சோதிடம், பருவ காலம், அன்றாட வாழ்வியல் என அனைத்தும் மனதில் தைக்கும்படி பொருட்செறிவு பெற்றதாக விளங்குகின்றன. மாணவர்களுக்குப் பயன்படும்.
– புலவர் சு.மதியழகன்