பயங்கர நகரம், விடியாத இரவுகள், கொலை எக்ஸ்பிரஸ், மீண்டும் சங்கர்லால், சங்கர்லாலுக்கு சவால் என்னும் ஐந்து மர்ம நாவல்கள் அடங்கிய தொகுப்பு நுால். பயங்கர நகரம் மட்டும் தமிழ்வாணன் எழுதியது. மீதமுள்ளவை லேனா தமிழ்வாணன் எழுதியவை. கதையைத் துவங்குவதிலும், கதையை நகர்த்துவதிலும் பாத்திரங்களுக்குப் பெயர் சூட்டுதல், திகில் ஏற்படுத்துதலில் இருவருக்கும் வேறுபாடே தெரியவில்லை.
நிழல் மனிதன், பூனை மனிதன் என்ற பாத்திரங்கள் வழியாக, பயங்கர நகரம் நாவலில் கதையை நகர்த்தியுள்ளார் தமிழ்வாணன். அடுத்துள்ள நாவலில், இரண்டு பெண்கள் கொலை செய்யப்படுகின்றனர். கதிரொளி, மணிமொழி, முத்தழகி என்னும் தமிழ்ப் பெயர்களுடன் ‘கிரீச், டுமீல்’ என்ற ஒலிகள் இணைந்து கதையை ஜெட் வேகத்தில் பறக்க வைக்கிறது.
மர்மம் நிறைந்ததாக வாசகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளன. கையில் எடுத்தால் படிக்காமல் வைக்க முடியாத நுால்.
– முகிலை ராசபாண்டியன்