முற்பிறவியில் ராமானந்தரின் சீடராக இருந்த கபீர்தாசர், இப்பிறவியில் ஷீரடி சாய்பாபாவாக விளங்குகிறார் என நிறுவும் நுால். வெங்குஸதாஸ் குருவாக அனைத்துக் கலைகளையும் கற்றுத் தந்தார் என்று பதிவிடப்பட்டுள்ளது.
ஷீரடி சாய்பாபாவின் இளமை கால வாழ்க்கை, அப்போது நிகழ்ந்த அற்புதங்கள் விரிவாக விளக்கப்பட்டுள்ளன. இளமையில் யோக கலைகளில் வல்லவராகவும், மல்யுத்த வீரராகவும் விளங்கியதை குறிப்பிடுகிறது. ஹிந்து, முஸ்லிம் மக்களிடம் நட்பை வளர்த்தவர்; மரணத்தை உணர்ந்து அறிவித்தவர் என்ற தகவல்கள் வியப்பூட்டுகின்றன.
தண்ணீரைக் கொண்டு விளக்கு ஏற்றியது, புத்திர பாக்கியம் அருளியது, கோதுமை மாவால் காலரா பரவாமல் தடுத்தது, தொழு நோயைத் தடுத்தது என பல அற்புதங்கள் பற்றி கூறப்பட்டுள்ளது. மகல் சபதி, பையாஜி, ஷாமா, தத்யா என்ற தீவிர பக்தர்கள் பாபாவிற்கு அணுக்கமாக இருந்த நிகழ்வுகள் நிரல்படுத்தப்பட்டுள்ளன. பாபாவின் அருளுரைகளும், பாபாவை நினைந்துருகி புகழ் பாடும் ஸ்லோகங்களும் இடம் பெற்றுள்ளன.
– புலவர் சு.மதியழகன்