பத்தொன்பது படைப்பாளர்களின் சிறுகதைகள் கொண்ட தொகுப்பு நுால். நரிக்குறவர்கள் வேட்டைத் தொழிலை விட்டு, வேறு தொழில் செய்ய வந்து விட்டனர். அப்படி மாறியபோதும் செய்வது உயர்வாக இல்லை என்ற உண்மையை எல்லாக் கதைகளும் எடுத்துக் கூறுகின்றன.
துப்பாக்கி ஏந்தி வேட்டைத் தொழில் செய்யத் துவங்கிய வாழ்க்கை நிலையை, ‘குறவன் குறத்தி ஆட்டம்’ என்னும் நிகழ்த்துக் கலை அறிவிக்கும். டப்பாவைத் தொங்கவிட்டு வயிற்றையும் தட்டியபடி கையேந்தி நிற்கும் சிறு குழந்தைகளை இப்போது பார்க்க முடியும்.
இந்தச் சமூக மக்களின் வாழ்வு நிலையை ஓரளவுக்கு அறிந்து கொள்ள சிறுகதைத் தொகுப்பு உதவுகிறது. விலங்குகளை வேட்டையாடி வாழும் இந்த மக்களிடம், சில உயிர்களைக் கொல்லக் கூடாது என்ற எண்ணமும் இருக்கிறது. சிறுகதை வாசகர்களும், குடிமையியல் ஆய்வாளர்களும் படிக்க வேண்டிய நுால்.
– முகிலை ராசபாண்டியன்