அற நுால்களில் கூறப்பட்டு உள்ள உணவு நெறி முறைகளை தொகுத்துக் கூறும் நுால். உடல் பருமன் ஆபத்தானது; துரித உணவை தவிர்க்க வேண்டும்; உடம்பின் நீர்மச் சமநிலையை பேண வேண்டும் என அறிவுரைகள் கூறுகிறது. இதய நலனை மேம்படுத்துதல், உப்பின் அளவு மிகுதியால் ஏற்படும் பாதிப்புகளை சுட்டிக்காட்டி எச்சரிக்கிறது.
நீர், பால், தேன் போன்ற நீர்ம உணவுகளின் பயன்பாடு, பழம், காய்கறி, பருப்பு, எண்ணெய் வித்து, தானியங்களில் அடங்கியுள்ள சத்துகள், மருத்துவ குணங்களை விளக்கியுள்ளது.
உணவுக்கு மணமும் சுவையும் சேர்க்கும் இஞ்சி, பூண்டு, பெருங்காயம், கொத்துமல்லி, வெந்தயம், மிளகு, மஞ்சள், சீரகம், இலவங்கம், கிராம்பு, ஏலம் இவற்றின் பயன்பாடுகளும், மருத்துவ குணங்களும், நோய் தீர்க்கும் பண்புகளும் நிரல்படுத்தப்பட்டுள்ளன.
மூளைக்கு உணவளிக்க ஏற்ற வழிகளும், முதுமையை தள்ளிப் போடும் வழிமுறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. கேடு விளைவிக்கும் உணவு வகைகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. உடலும் உள்ளமும் உறுதிபட வாழ வளமான செய்திகள் செறிந்துள்ள நுால்.
– புலவர் சு.மதியழகன்