உலகம் உயிர்ப்புடன் இருப்பதற்கு காதல் தான் காரணம் என்ற சிந்தனையில் எழுதப்பட்ட கவிதை தொகுப்பு நுால். காதல் வயப்பட்ட கண்களுக்கு, வானம், கடல், மழைத்துளி, காற்று, ஓசை போன்ற சகலமும் காதலாக தெரியும் என்கிறது.
காதல், உடல் சார்ந்ததல்ல; மனம் சார்ந்தது என உணர வைக்கிறது. எந்த வயதிலும் காதல் வரும். ஆனால், கல்லுாரி காதலில் கலைநயம் அதிகம் என்கிறது. ‘பெண் அணிவதால் நகைக்கு தான் அழகு; கை ரேகையை கையிலும், வெட்க ரேகையை பெண்ணின் முகத்திலும் பார்க்க முடியும்; பெண் தலையில் கை வைத்து உட்கார்ந்தால், ஏன் வந்தோம் என வருத்தப்படுமாம் தலைவலி’ போன்ற கவிதை கள் ஏராளம்.
இளமை காலத்தை பின்னோக்கி நினைக்க வைக்கும் வரிகள், இன்றைய இளைஞர்களை ஈர்க்கும். உள்ளத்தில் எளிதாக பதியும் அளவு ஈரம் நிறைந்திருக்கிறது.
– டி.எஸ்.ராயன்