சிவாலயங்களில் பிரகாரம் வலம் வரும்போது, 63 பேருடைய சிலைகள் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்திருக்கிறோம். அவை நாயன்மார்களின் சிலைகள் என்பதை அறிவோம்; ஆனால், அவர்களுடைய பெயர்களோ, வரலாறோ எத்தனை பேருக்குத் தெரியும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக ஈசனுக்குத் தொண்டாற்றி, இறைவனின் திருக்கருணை பெற்றவர்கள்.
இவர்களின் வரலாற்றை சிலர் கவிதையில் சொல்லியிருக்கின்றனர்; சிலர் உரைநடையில் எழுதியிருக்கின்றனர்; இந்த நுாலில் சற்றே வித்தியாசமாக நாடக வடிவில் சிறிது கற்பனை கலந்து, மூலத்திற்குக் குறைவு வராது எழுதியிருக்கிறார்.
பக்தி உணர்வின் வெளிப்பாடாக வெளிவந்திருக்கிறது. 63 நாயன்மார்கள், மனுநீதிச் சோழன், கிருபானந்த வாரியார் பற்றி எழுதப்பட்டிருக்கிறது. நாயன்மார்கள் வரலாற்றை விளக்கும் பெரியபுராணத்தை முழுமையாக படிக்க இயலாதவர்களுக்கு எளிய வரப்பிரசாதம்.
– இளங்கோவன்