காப்பியம் என்ற சொல்லையும், இலக்கணத்தையும் ஒப்பீட்டு முறையில் ஆய்வு செய்து விளக்கமாக கருத்துகளை பதிவு செய்துள்ள நுால். ஐம்பெருங்காப்பியங்களில் சீவக சிந்தாமணியைக் காலத்தால் பிந்திய காப்பியம் என அறிமுகம் செய்கிறது. முதல் காப்பியமாகச் சிலப்பதிகாரத்தையும் தொடர்ந்து மணிமேகலையையும் அறிவிக்கிறது.
கம்ப ராமாயணம், பெரிய புராணம், பாஞ்சாலி சபதம் மற்றும் இயேசு காவியத்தை இலக்கிய நோக்கில் அணுகியுள்ளது. சிலப்பதிகாரத்தைக் காப்பிய இலக்கணத்துடன் பொருத்திக்காட்டி சிறப்பை எடுத்துரைக்கிறது.
மாதவியின் 11 ஆடல்களைப் பட்டியல் போட்டுக் காட்டியதுடன், எந்தெந்த ஆடலில் யார் எல்லாம் புகழ் பெற்று விளங்கினர் என்பதையும் அறிவிக்கிறது. பெரிய புராணத்தின் தொகை அடியார் பட்டியலையும், ஒவ்வொரு சருக்கத்தில் அமைந்துள்ள படலங்களையும் வழங்குகிறது. காப்பிய ஆராய்ச்சி செய்வோர் கடந்து போய்விட முடியாத செய்திகளைக் கொண்டுள்ள நுால்.
– முகிலை ராசபாண்டியன்