சலியாத முயற்சியை முதன்மையாகக் கொண்டு, நாளும் அயர்வின்றி இலக்கை நோக்கி பயணிப்பவர்களுக்கு, ‘முடியாததும் முடியும்’ என்னும் உறுதிப்பாட்டை தரும் தன்முனைப்பு கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
ஊனத்தைப் புறந்தள்ளி வாழ்வின் உச்சத்தை தொட்ட மாற்றுத் திறனாளி ஐ.எப்.எஸ்., தேர்வில் தேர்ச்சி பெற்றது பற்றிய பதிவு நம்பிக்கையூட்டுகிறது. சில வாரங்களே உயிருடன் இருப்பாய் என மருத்துவர்களால் கெடு விதிக்கப்பட்ட ஷேன் ஸ்வார்னர், அதிலிருந்து மீண்டு எவரெஸ்ட் சிகரம் உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும் உள்ள சிகரங்களில் தடம் பதித்த நிகழ்வு உன்னதமாக உள்ளது.
புகழின் உச்சாணிக்கொம்பில் மாபெரும் சாதனையாளர்கள் பலர் தோல்விகளால் உரம் பெற்று, தொடர் முயற்சியால் வெற்றியின் உச்சத்தை தொட்ட வரலாறை பதிவு செய்துள்ளது. மூளையை அதிகம் பயன்படுத்தியதாக போற்றப்படும் ஐன்ஸ்டீன், கணித மேதை ராமானுஜர், ராஜாஜி, அல்லாடி கிருஷ்ணமூர்த்தி போன்றோர் தேர்வில் தோல்விகளைத் தழுவியவர்கள். அதற்கு மாறாக வாழ்வில் 100 மடங்கு எழுச்சி பெற்றனர் என்பதை விளக்குகிறது.
சமுதாய கோணல்களுக்கு உளவியல் நிலையில் உரத்துச் சொன்ன குறட்பாவின் தீர்வுகளை வாழ்வியல் திறன்களோடு தந்துள்ள நுால்.
– புலவர் சு.மதியழகன்