சாதிக்க முடியாத இயலாமைக்கு உரிய காரணங்களை பட்டியலிட்டு, நம்பிக்கை தரும் விதமாக மன மாற்றத்தை ஏற்படுத்தும் நுால். சமூகத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நிலைப்பாட்டை தகவமைப்பது பற்றி தொடர் ஓட்ட பாணியில் விவரிக்கிறது. அலுப்பூட்டும் அறிவுரை தகவல் எதுவுமில்லை.
நண்பர்களின் உரையாடல் போல் சொல்ல வந்தது அழுத்தமாகப் பதிவாகியுள்ளது. கற்றைத் தாளில் எழுதுவதற்கும், ஒற்றைத் தாளில் எழுதுவதற்கும் உள்ள வித்தியாசத்தை, வாழ்க்கையின் அடித்தளத்துடன் ஒப்பிட்டு கூறியிருக்கும் கருத்து அற்புதம்.
குழந்தை வளர்ப்பில் தந்தையின் போக்கு மீன் போலவும், யானை போலவும் இருக்கக் கூடாது; சிங்கம் போல் இருக்க வேண்டும். தனக்கு கீழ் உள்ளோரிடம் நாம் காட்டும் சினம், அவருக்கு அடுத்தடுத்த நிலைகளில் உள்ளோரிடம் எப்படி எல்லாம் விஸ்வரூபமெடுக்கும் என்பதும் விளக்கப்பட்டுள்ளது. அன்றாட செயல்களை செம்மைப்படுத்த உதவும் தகவல்கள் நிறைந்துள்ள நுால்.
– சையத் அலி