இந்திய பண்பாட்டு பெருமையை ஆவணப்படங்கள் வாயிலாக உலகுக்கு பறைசாற்றிய, கிருஷ்ணஸ்வாமி அசோசியேட்ஸ் நிறுவனர் எழுதியுள்ள சுயசரிதை நுால். ஒரு தம்பதியின் சுயசரிதை என்ற முத்தாய்ப்புடன் அவரது துணைவி டாக்டர் மோகனாவின் வாழ்க்கையும் பதிவாகியுள்ளது.
அமெரிக்காவில் சோவியத் அதிபரின் செருப்படி, பொற்கோவிலில் ராணுவ நடவடிக்கை, இலங்கை உள்நாட்டுப் போரில் இந்திய அமைதிப்படை நடவடிக்கை, ஜாவா நிலநடுக்கம் போன்ற உலக நிகழ்வுகள் அனுபவமாக இந்த சுயசரிதைக்குள் படிந்து, காவியமாக வெளிப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா பின்னணியில் புகழ்பெற்ற குடும்பத்தில் பிறந்தவர் டாக்டர் கிருஷ்ணஸ்வாமி. அவர் கொண்டிருந்த குறிக்கோள், அதை நிறைவேற்றியபோது வந்த தடங்கலை தாண்டிய விதம், அப்போது கற்ற பாடங்கள், பெற்ற வெற்றிகள் வழியாக, இந்த நுாற்றாண்டில் நிகழ்ந்து வரும் தகவல் புரட்சியின் ஆழத்தைக் காண முடிகிறது.
குடும்பத்தில் உறவுகளுடன் இணக்கமான அணுகுமுறை, அமெரிக்க படிப்பில் தடங்கல் நீக்கிய பாங்கு, தொலைக்காட்சி தொடர்பான தொழில், பன்னாட்டு உறவுகள், இந்திய பண்பாட்டு வேர்களை ஆவணப்படுத்த நடந்த கடினப் பயணங்கள் எல்லாம் அனுபவமாக வெளிப்பட்டு உள்ளன.
பெண் கல்வி சார்ந்த உயர்வான பார்வை, அறிவியல் ஆய்வில் உரிய தகுதியிருந்தும் தன் மனைவிக்கு கிட்டாத வாய்ப்புகள், அதை மீறி அவர் படைத்த சாதனைகள் என நம்பிக்கை தரும் அனுபவங்களை பகிர்ந்துள்ளது மதிப்பை தருகிறது.
தந்தையிடம் துவங்கி பெரிய ஆளுமையான எம்.ஜி.ஆரிடம் வரை, மனதில் பட்ட கருத்தை துணிச்சலுடன் பகிர்ந்த விதம் தனித்துவத்தை வெளிப்படுத்துகிறது. விவாக ரத்து போன்ற கடும் வலி தரும் குடும்ப நிகழ்வில் கூட, நிதானம் தவறாது வெளிப்படையாக கருத்து சொல்லப்பட்டு உள்ளது. தீர்வை முன்வைக்க முயல்கிறது.
சிக்கலான தருணங்களில் கடைப்பிடிக்கும் பொறுமை, சகிப்பு, விடாமுயற்சி, நிதான அணுகுமுறை, விட்டுக் கொடுத்தல் போன்ற பண்புகளால் கிடைக்கும் பயன்களை அனுபவமாகக் காட்டி படிப்பினை தருகிறது. நிதானமாக சிந்திப்பதற்கும், நெகிழ்வதற்கும், வியப்பதற்கும், நம்பிக்கையுடன் கற்றுக் கொள்வதற்கும் நிறைய தருணங்களை உருவாக்கித் தருகிறது இந்த சுயசரிதை நுால்.
– அமுதன்