கிராமத்து எளிய மனிதர்களின் வாழ்க்கையை பதிவு செய்துள்ள நாவல். குற்றப் பரம்பரை என அடையாளம் குத்தப்பட்டு, சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் தென்னாற்காடு, காலியாமேடு பகுதியில் வாழ்ந்த அழகப்பன் என்பவரைப் பற்றி இந்த நாவல் பேசுகிறது. இதில் வரும் பெரும்பாலான பாத்திரங்கள் இன்றும் சாட்சியாக உள்ளனர்.
விருத்தாசலம் வட்டாரப் பகுதிகளில் எங்கு களவு நேர்ந்தாலும், தொண்டங்குறிச்சி பகுதி மக்களை நோக்கி காட்டப்படுவது, அவர்களை விசாரிப்பது, தண்டிப்பது ஏன் எனத் துவங்கி, அப்பகுதி மக்கள் பழக்க வழக்கம், பண்பாடு, கட்டுப்பாடு, நம்பிக்கை குறித்து விவரிக்கிறது.
இந்த இழி அடையாளத்தை சுமந்து திரிந்த மக்களை மீட்க, ஊர்ப் பெரியோர், அரசு, அதிகாரிகள் பல்வேறு காலகட்டங்களில் மேற்கொண்ட முயற்சி, முன்னேற்றம் குறித்தும் சொல்லப்பட்டு உள்ளது. குற்ற அடையாளத்தை சுமந்து திரியும் பரம்பரையைச் சேர்ந்தவரின் மகள், அதே ஊரில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வருவதையும், அதற்கான போராட்டம் குறித்தும் சுவாரசியமாக விவரிக்கும் நாவல்.
– மேதகன்