மகாகவி பாரதியாரின் நினைவு நுாற்றாண்டை ஒட்டி வெளியிடப்பட்டுள்ள மிகப் பெரிய பாரதி கருவூலம் என்று மதிக்கத்தக்க நுால். மூதறிஞர் ராஜாஜி முதல் கவிஞர் நா.காமராசன் வரை, 107 அறிஞர்களின் கட்டுரைகள் அலங்கரிக்கின்றன.
பாரதி மண்டபத் திறப்பு விழாவின் போது கல்கி சிறப்பிதழில் வெளிவந்த 17 கட்டுரைகள், பாரதி நுாற்றாண்டு விழாவின் போது கலைக்கதிர் சிறப்பு மலரில் வெளிவந்த மூன்று கட்டுரைகளுடன் 127 முத்துகளைக் கொண்டுள்ளது.
பாரதிக்கு நினைவு மண்டபம் கட்ட, 1945ல் அடிக்கல் நாட்டப்பட்டது; கோல்கட்டாவில் பாரதி தமிழ்ச் சங்கம் இயங்குவது போன்ற அரிய தகவல்களை கொண்டுள்ளது. பெருந்தலைவர் காமராஜர், பாரதி பற்றி இதய ஒலி என்னும் தலைப்பில் வரைந்த சிறு கட்டுரையும் இடம் பெற்றுள்ளது.
அண்ணாதுரை எழுதிய இரண்டு கட்டுரைகள், வ.உ.சி., எழுதிய ஒரு கட்டுரை என, வரிசை நீண்டுள்ளது. பாரதியையே குயிலாக வருணித்து, கவிதை படைத்துள்ளார் கவிஞர் கண்ணதாசன். செந்தமிழ் இதழில் பாரதி சார்ந்து வந்த கட்டுரைகள் பழமையான தகவல்களைத் திரட்டித் தருகின்றன. ஜாதி பேதம் இல்லாத பாரதி, தன்மானம் மிக்க பாரதி, உலக மகாகவி பாரதி, யுகப் புரட்சியாளன் என பன்முகமாக அடையாளம் காட்டுகிறது. பாரதியின் திறனை 21ம் நுாற்றாண்டிற்கு எடுத்துச் சொல்லும் எண்ணத்துடன் உருவாக்கப்பட்டுள்ள நுால்.
– முகிலை ராசபாண்டியன்