தமிழிலக்கியங்களின் சிற்றிலக்கியங்கள் தொகுப்பில் பாடப்பட்ட பரணி வகையில், பண்டைய புலவர் செயங்கொண்டார் தாழிசையில் இயற்றிய கலிங்கத்துப்பரணியின் மூலப் பாடல்களுக்கு, பல்லாண்டுகளுக்கு முன் வெளியான உரை நுாலின் மறுபதிப்பு.
கடவுள் வாழ்த்துப் பாடல்களோடு துவங்கி கடை திறப்பு, காடு பாடியது, கோவில் பாடியது, தேவியைப் பாடியது, பேய்களைப் பாடியது, போர் பாடியது, களம் பாடியது ஆகிய பாடல்களுடன் இந்திரசாலம், இராச பாரம்பரியம் பேய் முறைப்பாடு, காளிக்குக் கூறியது ஆகிய தலைப்புகளில் உரை அமைந்துள்ளது.
கற்பனைத் திறனோடு சிறந்த சந்தத்தில் அமைந்த பாடல்களில் உள்ள சொல், பொருள் நயம், நடைநயம் ஆகியவை எளிய நடையில் கொணரப்பட்டுள்ளன. வீரம், காதல், வெகுளி, அவலம், காமம், அச்சம் முதலிய அனைத்துக்கும் சுவை குன்றாமல் உரை விளக்கம் தந்திருப்பது சிறப்பு.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு