சித்தர்களின் ஜீவ சமாதி உள்ள இடம், சித்தர்கள் வாழ்ந்த நிலை, அருள் செய்த விதம் ஆகியவற்றை தொகுத்துத் தரும் நுால். சித்தர்களே பேசும் தெய்வம் என துவங்கி, நவகோடி சித்தர்புரம் என்னும் திருவாவடுதுறை ஞான பூமியில் வாழ்ந்த ஒன்பான் சித்தர்கள் என்ற தலைப்போடு 61 கட்டுரைகளைக் கொண்டுள்ளது.
எட்டு வகை ஆற்றல்கள் கைவரப் பெற்ற சித்தர்கள், மக்களின் நன்மைக்காகவே அந்த ஆற்றலைப் பயன்படுத்தியுள்ளதாக கூறுகிறது. சித்தர் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்களை கூறுகிறது. சிவன் சாபத்தைச் சித்தர்களால் தீர்த்துவிட முடியும்; சித்தர் சாபத்தை யாராலும் தீர்க்க முடியாது. ஆயிரம் கோவில்களில் வழிபட்டால் கிடைக்கும் புண்ணியம், ஒரே சித்தர் சமாதியில் வழிபட்டால் கிடைத்துவிடும் என்று கூறுகிறது.
மஹான் விசிறி சுவாமிகள் வரலாற்றை விவரிக்கும் விதமாக அவரது தோற்றம், உடுத்திய ஆடை, கையில் கொண்ட விசிறி, கொட்டாங்குச்சி, சென்ற இடங்கள், செய்த அற்புதங்கள், ஏற்படுத்திய ஆஸ்ரமம் எல்லாம் ஒன்று விடாமல் தரப்பட்டுள்ளது. சித்தர் ஜீவ சமாதிகளைப் பற்றி தெரிந்து கொள்ள பயன்படும் நுால்.
– பேராசிரியர் இரா.நாராயணன்