மனோவசியம் பற்றியும், மனோசக்தி மர்மங்கள் பற்றியும் சுவையான தகவல்கள் தரும் நுால். மனோவசியத்தால் மூளை, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களையும், பயம், சித்தப்பிரமை, அஜீரணம், வாதம், கை, கால் வலி, அசதி, துாக்கமின்மை, தலைவலி, மறதி போன்ற
வியாதிகளையும் குணமாக்கலாம் என்று சவால் விட்டுள்ளது.
உடலில் சித்த சக்தி, விருப்பப்படும் சக்தி இரண்டும் உள்ளன. மனதில் பாயும் சக்தி, தாங்கும் சக்தி, அமைதி நிலை சக்தி என்ற மூன்றும் உள்ளதாக விளக்குகிறார். பிராணாயாமம் என்னும் சுவாசப் பயிற்சியால் அமைதி, பொறுமை, சாந்தம், அடக்கம், மகிழ்ச்சி, மனோதிடம் ஆகிய நற்குணங்களைப் பெறலாம் என அறிவுறுத்துகிறது.
அடிவயிற்றின் அருகில் அக்னிப் பிரகாசமான, ஆத்ம சக்தி அதிகம் உள்ள மணிபூரகம் உள்ளது. இதிலிருந்து ஜீவசக்தி வெளியேறி உடல் முழுதும் பரவுகிறது என ஏகாக்கிர சித்த நிலை பெறும் பயிற்சி முறை விளக்கப்பட்டுள்ளது.
மனம் ஆகாயம் போன்றது. மனம் அசைந்தால் பிரபஞ்சமும் அசைகிறது. ஆகாயம், ஆன்மா, பிரம்மம் மூன்றும் பார்வைக்குத் தெரியாமல் வழி நடத்தி, ஞானத்தை வழங்குவதாக குறிப்பிடுகிறது. மனதின் மகத்தான வசியம் பற்றி கூறும் நுால்.
– முனைவர் மா.கி.ரமணன்