சிற்றிலக்கியங்கள் தோன்றிய காலத்தில், தமிழர் வாழ்ந்த பகுதிகளில் பிற மொழி பேசுவோரின் ஆட்சியதிகாரம் காரணமாகத் தமிழ் மொழி மற்றும் தமிழர் வாழ்க்கைக்கு ஏற்பட்டிருந்த சேதங்கள், பெண்களுக்கு எதிராக புனையப்பட்ட ஒழுக்க விதிகள், அரசியல் மாறுபாடுகள், சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் ஏழ்மை நிலையிலிருந்த மக்களுக்கு ஏற்பட்ட இழிநிலைகள் குறித்து ஆராயும் கட்டுரைகளின் தொகுப்பு நுால்.
பழந்தமிழ்ப் படைப்புகளை, சமூகவியல் பார்வை அடிப்படையில் மாறுபட்ட கோணங்களில் அணுகி, கூர்மையான விமர்சனக் கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆட்சியிலிருந்தவர்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட நம்பிக்கை அடிப்படையிலான சடங்குகள் மற்றும் வாழ்க்கை நெறிகளில் உள்ள நுண்மையான அரசியல் பற்றி மிகத்தெளிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
சங்க கால இலக்கியங்களில் அகவாழ்க்கை கட்டமைப்புகள் பற்றி விவரித்து, பெண்மையின் அடிப்படைகளாகத் தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாணம், கற்பு விதிகள் நுாற்பா எடுத்துக்காட்டுகளோடு தரப்பட்டுள்ளன.
தாய்வழிச் சமூகம் சிதைவுக்குப் பின் பெண்களுக்கான சொத்துரிமை, பேச்சுரிமை மீது திணிக்கப்பட்ட விதிகளின் தாக்கம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்த சமூக இழிவுகள், விளிம்பு நிலை மக்களின் துயரம் இலக்கியங்களாக பதிவு செய்யப்படவில்லை என்பதை பதிவு செய்கிறது. ஒடுக்கப்பட்டோர் குரல் தமிழிலக்கியத்தில் பல நுாற்றாண்டுகளாக பதிவாகவில்லை என்ற ஆதங்கம் ஆய்வுக்குரியது.
புராணங்கள், பழமரபுக் கதைகள், வழக்காற்றுப்பாடல் வடிவங்களில் தமிழ்ச் சமூகத்தின் வரலாறு புனையப்படாத வெற்றிடம் சான்றுகளோடு குறிப்பிடப்பட்டுள்ளது. அறம் சார்ந்த புரிதலுக்கு அப்பால் மனிதன் திணித்துக்கொண்ட புலன் சார்ந்த கட்டுப்பாடுகள், சமூகத்தில் மகத்தான ஒழுங்குமுறையை உருவாக்கிஇருந்ததை கூர்ந்து ஆராய்ந்து விளக்கியுள்ளது.
சங்க காலத்தில் அரசியலுக்கு மாறுபட்டு, அழுத்தமான சமய ஊடுருவல்களால் காப்பிய, சிற்றிலக்கியங்களில் உண்டான விளைவுகளும், விளிம்புநிலை மக்களின் இன்னல்களும் ஆழமாக விவாதிக்கப்பட்டுள்ளன. சமூகவியல் நோக்கிலான இலக்கிய ஆய்வாளர்களுக்கு உதவும் நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு