கணவரை பிரிந்து, குழந்தைகளுடன் வாழும் பெண் எப்படி இந்த சமூகத்தில் எதிர்நீச்சல் போட்டு வாழுகிறார் என்பதை விவரிக்கும் நாவல். நாவலின் நாயகியாக கன்யா வாழ்கிறார். அவரை பிரிந்து, பல பெண்களுடன் தொடர்பில் இருக்கிறான் கணவன். ஒவ்வொரு பெண்களும் அவன் சுயரூபத்தை உணர்ந்து, ஒரு கட்டத்தில் பிரிந்து செல்கின்றனர்.
முதியோர் கல்வியில் ஆசிரியராக பணி புரிந்து, குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்துடன் வாழ்கிறார் நாயகி. துரோகம் செய்த கணவன் விபத்தில் சிக்கிய போது, ஓடோடி சென்று கவனிக்கிறார். உடல் தேறியதும் மீண்டும் பெண்களை தேடி பறக்கும் கணவனின் செயல் மன்னிக்க முடியாத குற்றமாகிறது. இறுதியில் கன்யா என்ன முடிவு எடுக்கிறார் என்பதை உணர்வுப்பூர்வமாக நகர்த்தும் நாவல்.
ஆண் தவறு இழைத்தால் கடந்து செல்லும் சமூகம், பெண்ணை, வார்த்தையால் அணுஅணுவாக கொல்லும் என்கிறது. கதை, நாவல் எழுத துடிப்போருக்கு பயன்படும் நுால்.
– டி.எஸ்.ராயன்