குடும்ப உறவு, முதியோர் நலன், இளைஞர் பொறுப்பு, திருமணம் போன்றவற்றை, சமூக நலனுடன் விவரிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். மொத்தம், 13 கதைகள் உள்ளன. பல ஆண்டுகளுக்கு பின் பிறந்த பெண் குழந்தையை, அதீத பாசத்துடன் வளர்க்கிறார் தந்தை. அவள் விரும்பும் கொலுசு வாங்கி கொடுக்க முடியாத இயலாமையை, ஏழைத் தந்தைகளின் ஏக்கமாகச் சொல்கிறது ‘கொலுசு’ என்ற கதை.
கணவனின் அன்பை இழந்ததால், பணம் முக்கியமில்லை என, பரிசு விழுந்த லாட்டரி சீட்டை கிழித்து போடும் மனைவியின் பாசத்தை, ‘கணவரின் விலை’ என்ற கதை காட்டுகிறது. சீர்வரிசையாக, பெண்ணின் தாயிடம் கடிதம் கேட்ட மாப்பிள்ளையின் தங்க மனம், கருத்தை கவர்கிறது. இப்படி, மனித மனங்களை படம் பிடித்து காட்டுகின்றன கதைகள். சிறுகதை எழுத முயல்வோருக்கு பயன்படும் நுால்.
– டி.எஸ்.ராயன்