முகமது நபியின் வாழ்க்கை முறையையும், அவரது உயரிய பண்பு நலன்களையும் பறை சாற்றும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். சிறுவர், ஏழை, எளியவர், நோயாளிகள் மீது பேரன்பு காட்டும் மனிதநேய மாண்பாளர் நபிகள் என பதிவு செய்யப்பட்டுள்ளது. தோல்விகளைக் கண்டு துவளாத பண்பு, வேலைகளை பகிர்ந்து கொடுக்கும் வழக்கம், இறந்தவர்களை எடுத்துச் செல்லும்போது செய்யும் மரியாதை, மூத்தவர்களை மதித்து நடக்கும் பண்பு, விலங்குகளை துன்புறுத்துவதைத் தடுத்தது போன்ற நற்பண்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அரபு தேசத்தில் மது, மாது, சூது, பெண்ணடிமை, வழிப்பறி, மூட நம்பிக்கை என எண்ணற்ற தீய பழக்கங்கள் இருந்ததையும், விருந்தோம்பல், வாக்கு மாறாமை எனச் சில நற்பண்புகள் நிலவியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அக்கிரமம், அநியாயங்களை எதிர்க்கும் போதும், நேர்மை நியாயத்திற்காகப் போராடும்போதும் பெருங்கோபம் உடையவராக விளங்கிய நபி, மன்னித்தருளும் மகத்தான பண்பை பெற்றிருந்தார் என சான்றுகளுடன் நிறுவும் நுால்.
– புலவர் சு.மதியழகன்