ஆர்ப்பரிக்கும் காதலை வெளிப்படுத்தும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். குடும்பங்களில், தம்பதியர் இடையே பேச நேரம் இல்லை என்பர். இதில் வரும் கதைகள், பேசுவதற்கு ஏதேனும் காரணத்தை துாண்டுகின்றன.
மனைவியை குழந்தையாக பாவிக்கும் கணவன் காட்டும் காதல், அன்பை விவரிக்கிறது. கதைகளில் கிராமிய மணம் வாசிக்க துாண்டுகிறது. திருவிழாக்கள் மீதுள்ள பண்பாடு ஆர்வமூட்டுகிறது. குழந்தை பருவத்தில் குளம், ஆறு மீதிருந்த ஈர்ப்பை சொல்கிறது. ஐ.டி., நிறுவனங்களில் நடப்பதை, நையாண்டியாக சொல்லும் விதம் ரசிக்க வைக்கிறது.
பள்ளி, கல்லுாரி, பணியிடங்களில் நடக்கும் சம்பவங்களை நினைவூட்டுகிறது. மயிரிழையில் தப்பிச்சேன் என்ற சொல்லுக்கு, விளக்கம் கேட்கும் மனைவியிடம், கணவன் சிறுவயது கிணற்று குளியலை நினைவூட்டும் சம்பவம் குளிர வைக்கிறது.
படுக்கை அறையில் சொல்லும் கதை, தம்பதியர் இடையே உள்ள மனக்கசப்பை போக்கும். மறுநாள் காலை புத்துணர்ச்சியுடன் எழ வைக்கும். மொத்தம், 16 கதைகள் உள்ளன. இவை சமூகம், குடும்ப பிரதிபலிப்பு என்ற கருத்தை கொண்டுள்ளன. சுவாரசியம் குறையாத சிறுகதைகளின் தொகுப்பு நுால்.
– டி.எஸ்.ராயன்