ஜாதி கொடுமை, வேலையின்மை, முதியோர் புறக்கணிப்பு, குடும்ப வாழ்க்கை முறையை நயத்துடன் சொல்லும் கவிதை தொகுப்பு நுால். மொத்தம், 94 தலைப்புகளில் கவிதைகள் உள்ளன. ‘பாடம் படிக்கிற பாதி வேளையில், பட்டென்று நின்றுபோகும் படுபாவி மின்சாரம்’ என, அறிவிக்கப்படாத மின்தடையை சொல்கிறது. சாதீய தீமை குறித்த கவிதை, சமூக ஏற்றத்தாழ்வுகளை சாடுகிறது. சர்க்கரை நோயாளி அவதி, இல்லறத்தை கையாளும் முறை, பூமி, நதி, காற்றை பாதுகாப்பதின் அவசியம் குறித்து பேசுகிறது.
முதுமையின் கொடுமையை உணர வைக்கிறது. எல்லாவற்றையும் கடந்து வாழ வேண்டியதின் அவசியத்தை சொல்கிறது. ஓய்வு நாட்களை எப்படி பயனுள்ளதாக அமைப்பது, மகன் தந்தைக்கு ஆற்றும் கடமைகள் பற்றி எல்லாம் பேசுகிறது. மனிதர்களுக்கு இருக்க வேண்டிய குணங்களை, கவிதை வரிகளால் வர்ணித்து கண்முன் நிறுத்துகிறது. எளிய மொழி நடையில் படைத்துள்ள கவிதைகளின் தொகுப்பு நுால்.
– ராகவ்