முன்னாள் முதல்வர் ஜெயலலிதா – நக்கீரன் பத்திரிகை இடையே நடந்த மோதல்கள், வழக்குகள், சிறை அனுபவம், அலுவலகத்திற்கு பூட்டு, மின்சாரம், குடிநீர், கழிவுநீருக்கு தடை என விரிவாக அலசும் நுால்.
ஜெயலலிதாவை துணிச்சலுடன் எதிர்கொண்டது பற்றி கூறுகிறார். பத்திரிகை நிறுவனங்களை மிரட்டி பணிய வைப்பதை எதிர்கொண்டது குறித்து விவரிக்கிறார். வெடிகுண்டு வீசுவது, என்கவுன்டர் செய்வது போன்ற திட்டங்களை ஆதாரத்துடன் விவரிக்கிறார். அவற்றை முறியடிக்க, நீதிமன்றம் உதவியதை சொல்கிறார்.
ஊழியர்கள், குடும்பத்தார், உறவினர்கள் மீது நடத்திய உடல், உளவியல் தாக்குதல்களை கனத்த இதயத்துடன் பேசுகிறார். சிறை காலங்கள், அவமதிப்புகளில் இருந்து எதிர்நீச்சல் போட்ட தைரியத்தை கூறுகிறார்.
ஆட்சியாளர்கள், காவல் துறையை எப்படியெல்லாம் சுயநலனுக்காக பயன்படுத்துவர் என்பதை அறிய முடிகிறது. பல சம்பவங்களை, புகைப்படங்களே பேசுகின்றன. வரைபடத்துடன் விவரித்தது, வாசிப்பை வேகப்படுத்துகிறது. ஆட்சி அதிகாரம் எப்படி எல்லாம் செயல்படும் என்பதை தெரிவிக்கும் நுால்.
– டி.எஸ்.ராயன்