சமூகத்தில் நடக்கும் நிகழ்வை சார்ந்து எழுதப்பட்ட கதை நுால். படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத பட்டதாரி இளைஞர், கார் மெக்கானிக்காக வேலை பார்க்கிறார். பகுதி நேரமாக மாலையில், பாரில் வேலை பார்த்து குடும்பத்தைக் காப்பாற்றுகிறார்.
உதவாக்கரை தந்தை வாங்கிய கடன், வட்டியுடன் வதைக்க, தாயின் மருத்துவச் செலவை சமாளிக்க முடியாமல் தவிக்கிறார். அவரது உழைப்பையும், நேர்மையையும் பார்த்த தொழிலதிபர் உதவ முன் வருகிறார். கைம்மாறாக, சோரம் போய் கருவுற்ற மகளைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறார்.
துாய காதலைத் துாக்கி எறிந்து விட்டு தொழிலதிபர் மகளை மணந்து கொள்கிறார். மனைவிக்குப் பிறந்த பெண் குழந்தையை மகளாக பாசமுடன் வளர்க்கிறார். திருமணமாகியும் பிரம்மச்சாரியாக வாழ்ந்து, உழைப்பால் தொழிலதிபராக உயர்கிறார்.
எதிர்பாராத விதமாக முன்னாள் காதலியைக் கைம்பெண் கோலத்தில் கண்டு அதிர்ந்து போகிறார். துாய காதல் சேர்த்து வைத்ததா என்பதை விறுவிறுப்புடன் விளக்கும் திரைக்கதையுடன் கூடிய வசன நுால். தந்தை, மகள் பாச போராட்டத்தையும், நுட்பமான உணர்வுகளையும் படம் பிடித்துக் காட்டுகிறது. திரைப்படத்தைப் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது.
– புலவர் சு.மதியழகன்