கர்மவீரர் காமராஜர், ஜீவானந்தம், ஈ.வெ.ரா., வாழ்க்கை நிகழ்வுகளை சுருக்கமாக பதிவு செய்துள்ள நுால். செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த ஈ.வெ.ரா.,வின்அரசியல் பிரவேசம், காந்தியடிகளின் கட்டளையை ஏற்று, தீண்டாமை ஒழிப்பு, மது விலக்கு போராட்டங்களில் ஈடுபட்டமை, கதராடையை சுமந்து விற்றமை, வைக்கம் போராட்டம் போன்ற வரலாற்றுப் பதிவுகள் நிரல்படுத்தப்பட்டுள்ளன.
கர்மவீரர் காமராஜர் விடுதலைப் போரில் பங்கேற்றமை, தமிழக மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றமை, தமிழக முதல்வராக ஆற்றிய பணிகள், காமராஜர் திட்டம் போன்றவை பதிவிடப்பட்டுள்ளன. ஜீவானந்தம், துவக்கத்தில் காங்கிரசிலிருந்து, பின் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தது, சுதந்திரப் போராட்ட வீரர் வ.வே.சு.ஐயர் ஆசிரமத்தில் இனப் பாகுபாடுக்கு எதிர்ப்பு, தமிழாசிரியராக வாழ்க்கை, தொழிற்சங்கம், கலை இலக்கிய பெருமன்றம் நிறுவியது குறித்து பதிவிடப்பட்டு உள்ளன. தமிழகத்தின், 90 ஆண்டு கால அரசியல் நிகழ்வுகளை அறிந்து கொள்ள உதவும் அரிய நுால்.
– புலவர் சு.மதியழகன்