நாள்தோறும் திருமுறைப் பாடல் ஒன்றை ஓதி, சிவனை வழிபட வேண்டும் என்ற எண்ணத்தில் தயாரிக்கப்பட்டுள்ள நுால். தினம் ஒரு திருமுறை வீதம் தொகுத்து வழங்கப்பட்டு உள்ளது. வழிபாடு தான் தவம் என்கிறது. ‘நெஞ்சகம் நைந்து நினைமின்கள் நாள்தோறும்’ என்று திருஞானசம்பந்தர் பாடியதை விளக்குகிறது. எல்லாராலும் செய்யக் கூடிய எளிய வழிபாடு, இறைவனை வாழ்த்தி வணங்குதல். மூவர் தேவாரத்திலிருந்து பாடல்கள் முறைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன; திருவாசகத்திலிருந்து பாடல்கள் தரப்பட்டுள்ளன.
ஆண்டு முழுதும் என்ற கணக்கில், தினமும் ஒரு பாடல்கள் முறைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. பன்னிரு திருமுறைப் பாடல்களின் விபரங்கள் அட்டவணைப் படுத்தப் பட்டுள்ளன. வேண்டுகோள்களை வகைப்படுத்தி பாடல் எண்கள் தரப்பட்டுள்ளன.
காலைக் கடன்களை முடித்து விட்டு, நுாலில் குறிப்பிட்டவாறு தினம் ஒரு திருமுறைப் பாடலை பக்தியோடு படித்து வரலாம். கண்ணில் படுமாறு வைத்து தவறாது படிக்க வேண்டும். சைவர்களுக்கும், ஆன்மிக அன்பர்களுக்கும் உதவும் நுால்.
– புலவர் இரா.நாராயணன்