நான்கு வேதங்களைப் பற்றியும், அவை கூறும் கருத்துகளைப் பற்றியும் விரிவாக விளக்கும் நுால். குருவின் அருகே செல்லுதல், மெய்ப்பொருளைப் பற்றிய ஞானத்தை அடைதல், துயரத்தை நீக்குதல் என்ற உபநிஷத் விளக்கத்தை தருகிறது.
குருவை அடைந்து பெற்றதே சந்தேகமற்ற ஞானம். அதைப் பெற்றவன் துன்பத்திலிருந்து விடுபட வேண்டும். அந்த ஞானம் உபநிஷத் எனப்படும் என விளக்குகிறது. வேதங்களுள் ரிக் வேதம் பழமையானது. யஜுர் வேதம் யாகம், வேள்வி பற்றி கூறுகிறது. சாம வேதம் இசை வடிவாக ஓதப்படுகிறது. அதர்வண வேதம் 28 நட்சத்திரங்களைப் பற்றி கூறுகிறது. சத்துரு நாசத்தின் பொருட்டு ஜபிக்க வேண்டிய மந்திரங்களைப் பற்றி குறிப்பிடுகிறது.
வேதாந்த சாரம் வினா – விடை என்ற பகுதியில், பயனுள்ள வினாக்களுக்கு விடை தருகிறது. தீவிர விரக்திக்கு அடையாளம் என்ன? சிரத்தையாவது யாது? அசிரத்தையாவது யாது? யமனுக்கும், காமனுக்கும் வித்தியாசம் என்ன? என்று கேட்டு வியக்கும் படி பதில் தருகிறது. யமன் சத்துருவாய் இருந்து பாபங்களைச் சோதித்து நன்மையைக் கொடுக்கிறான். காமன் பிரியனாய் இருந்து அனர்த்தத்தைக் கொடுக்கிறான் என்று விளக்கம் தருகிறது.
குருவின் இலக்கணத்தை கூறுகிறது. அஷ்டாங்க யோகம் பற்றியும் விளக்கம் தருகிறது. உபநிஷத் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ள உதவும் நுால்.
– பேராசிரியர் இரா.நாராயணன்