கைரேகை சாஸ்திரம், வாழ்வுக்கு வழிகாட்டும் அரிய கலை என நிறுவும் நுால். கைரேகை நிபுணர்கள், ஒருவர் கைகளை வைத்துக் கொள்ளும் நிலைகளைக் கொண்டே அவருடைய குணாதிசயங்களைப் புரிந்து கொண்டு விடுவர். கைகளின் அமைப்பை ஏழு வகையாகவும், விரல்களை குரு விரல், சூரிய விரல், சனி விரல், புதன் விரல் என வகைப்படுத்தி குணாதிசயங்களை வரையறுக்கலாம் என்கிறது.
உள்ளங்கைகளில் உள்ள ரேகைகளை முதல் தரம், இரண்டாம் தரம், மூன்றாம் தரம் எனப் பகுத்து இதய, புத்தி, ஆயுள், விதி, சூரிய, ஆரோக்கிய ரேகைகள் முதல் தரம் எனவும், குரு, சனி, சுக்கிர வளையங்கள், சந்திர இச்சா, கங்கண ரேகைகள் இரண்டாம் தரம் என்றும், செவ்வாய், திருமண, செல்வாக்கு, அவசர, அங்குலாஸ்தி, மேட்டு ரேகைகள் மூன்றாம் தரம் என்றும் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.
உலகில் உள்ள எல்லா மனிதர்களின் கைகளிலும் ஆயுள் ரேகையும் புத்தி ரேகையும் தவறாமல் காணப்படும் எனவும் கூறுகிறது. உள்ளங்கையில் கிரக மேடுகளின் படங்கள், அவற்றின் பலன்கள், காலத்தைக் கணிப்பது, ரேகை படங்களைத் தயாரிப்பது போன்ற விளக்கங்களும் விரிவாக சொல்லப்பட்டுள்ளன. கைரேகை நுட்பங்களை தெரிந்து, வாழ்க்கை முறையை அமைத்துக் கொள்ள உதவும் நுால்.
–
புலவர் சு.மதியழகன்