ராவணனின் மாட்சி, வீழ்ச்சிகளை மாறுபட்ட பார்வையுடன் விவரிக்கும் நுால். கம்ப ராமாயண வாசிப்பில் பின்பற்றப்படும் வழக்கமான பொருள் கொள்ளும் முறையிலிருந்து மாறுபட்டு, காப்பிய அவலச் சுவையை சார்பின்றி நுகர வைக்கிறது.
காப்பியத்தில் ஊடுருவியுள்ள முரண்களால் ஏற்பட்ட அவலச்சுவை, உளவியல் பார்வையில் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது. கம்பன் கைவண்ணத்தில் நுண்ணியக் கூறுகளை உணர்ந்து வெளிக்கொணரும் முயற்சியாக ராவணனைத் தலைவனாக்கும் கவிதைக் கலையை மீள்பார்வை செய்துள்ளது.
ராமன் ஒப்பற்ற கதை நாயகன் என்றும், ராவணன் தீராப்பழிக்கு ஆளான கதை மாந்தன் என்ற கோணத்திலிருந்து விலகி, ராவணன் மாட்சியை விவரித்து வீழ்ச்சியை விளக்குகிறது. ராவணனை கம்பன் கட்டியிருக்கும் நேர்த்தி, வீழ்ச்சியடையச் செய்ததில் உள்ள கவிச்சிறப்பு பற்றி சுவைபட விவரிக்கும் நுால்.
–
கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு