கல்கி வார இதழில் தொடராக வந்த நாவல், ஐந்து பாகங்களாக வெளியிடப்பட்டு உள்ளது. ஆடிப் பதினெட்டாம் நாளில், வீரன் வல்லவரையன் வந்தியத்தேவன் கம்பீரமாக குதிரையில் வீரநாராயண ஏரியை காணப் புறப்படுவதில் துவங்குகிறது.
காவிரியில் பாய்ந்து வீணாக கடலில் விழும் நீரை, ஏரிக்கு மாற்றிய பெருமை போற்றப்படுகிறது. அரசர்களின் நீர் மேலாண்மைத் திறனை உணர்த்துகிறது. குரவைக் கூத்தில் ஒன்பது பெண்கள் முருகன் பெருமையைப் பாடி ஆடுவதும், அதற்கு ஏற்ப வாத்தியங்கள் முழங்குவதும், பலி கேட்பதும், பூக்கள், கோலங்கள் என தமிழரின் கலைப் பண்பாட்டுப் பதிவுகள் பரவசம் தருகின்றன.
நாவல் தடத்தை இடைமறித்து வரலாற்றுச் செய்திகளும், ஆன்மிகத் தகவல்களும் சிறப்பாக பின்னப்பட்டு உள்ளன. மர்ம சினிமாக் காட்சிகளுக்கு முன்னோட்ட வழிகாட்டியாக அமைந்துள்ளது. கதை நடுவே திருக்குறள், தேவார பாடல்கள் நடனம் ஆடுகின்றன. வரலாறு, அறிவியல், இசை, மர்மம் என பல அம்சங்கள் நிறைந்த விறுவிறுப்பான நாவல்.
–
முனைவர் மா.கி.ரமணன்