எந்தை ஈசன் மிகப் பெரியவன். அவன் கருணை அளவிட முடியாதது. சிவனே என்று கண்ணை மூடி கும்பிட்டால், தஞ்சை ராஜராஜேஸ்வர் கட்டிய பெருவுடையார் கண் முன் தோன்றுவார். முகலாயர் காலத்தில் தஞ்சை கோவில் பக்கமே தலை வைத்து படுக்க முடியாத ஒரு தலைமுறைக்கு, ஈசனை எப்படி கற்பனை செய்து பார்க்க முடியும். தஞ்சை ஈசன் எப்படி இருப்பான் என்பது ஒன்றே சிந்தனையாய் 15 வயது மதுரன்.
முகலாயர்களோடு பல நாட்டு படையெடுப்பும் கலந்த பேரழிவு காலத்தில், பூஜையின்றி புல்லுருவிகள் புழங்கும் இடமாக மாறிப்போனது கோவில். அத்தனை காவலையும் மீறி சிவனை தரிசித்த சிறுவனின் ஆன்மிக பேராண்மையை விளக்கும் கதை. படிக்கும் போதே கண்ணீர் வழிவதை தடுக்க முடியாது.
ஆன்மிக உணர்வுகளை பரவவிட்டு, சிவன் ஒன்றே ஜீவனாய் வாழும் மதுரனோடு நம்மை ஒன்றச் செய்த ஆசிரியரின் எழுத்துக்கு ஆயிரம் கோடி நமஸ்காரம். இதயம் விம்மி இறைவனோடு வாழும் அதிசயம் இந்த புத்தகத்தின் வழியே நடப்பது உண்மை.
‘தி ஜங்கிள் புக்’ பயணப் பாதையை விட மிகக் கடினமான, கொடுமையான வீரர்களைத் தாண்டி, ஈசனை தொட்டு ஆனந்தித்த மதுரனின் அனுபவம் மேன்மையானது.
–
எம்.எம்.ஜெ.,