கதை கேட்பதென்றால் எல்லாருக்கும் பிடிக்கும்; அதுவும் குழந்தைகளுக்கோ மிக மிகப் பிடிக்கும். கதை என்றால் வெறும் பொழுதுபோக்குவதற்காக மட்டுமல்லாமல், அறிவுரையும் சேர்ந்திருந்தால், கசப்பு மருந்தை வெல்லத்தில் வைத்து கொடுப்பது போல் கேட்பதற்கும் இனிக்கும்; பயனுள்ளதாகவும் இருக்கும். அந்த வகையில் அமைந்ததுதான் பிரபு சங்கர் தொகுத்துள்ள, ‘அன்புள்ள குழந்தைகளே’ என்ற இந்த நுால்.
இந்த கதைகளை குழந்தைகளுக்கு கூறியவர் சங்கராச்சாரியார் ஜயேந்திர சுவாமிகள். இதற்கு மேல் இந்த கதைகளின் தரத்தைப் பற்றிக் கூறவும் வேண்டுமோ. இதில் உள்ள சில முத்துக்களைப் பார்ப்போம். நம்ம அம்மா, அப்பா நம்மையெல்லாம் எவ்ளோ கஷ்டபட்டு வளர்த்திருக்கா. அவாளை எந்தக் காலத்லேயும் நாம கைவிடாம, பத்திரமா பாதுகாத்து அவாளோட வயசு காலத்ல அவாளுக்கு முடியாம போகும்போது நாம உறுதுணையா இருந்து முழுக்க முழுக்க ஆதரவு தரணும். எந்த இக்கட்டு வந்தாலும், எந்த கஷ்டம் வந்தாலும், வாக்குன்னு கொடுத்தாச்சுன்னா அதை எப்பாடு பட்டாவது காப்பாத்தி தான் தீரணும்...
பகவான் நாமம்னு விநாயகா, ராமா, முருகா, கிருஷ்ணா, நாராயணான்னு எந்தப் பேரையாவது சொல்லலாம். பகவான் நம்மோடேயே இருந்து தப்பான வழியில போக விடாம தடுப்பார்... பேராசைப் படக்கூடாது. தகுதி என்ன, நமக்கு இவ்வளவுன்னு ஆண்டவன் விதிச்சது இல்லாம போகாதுன்னு நம்பி பகவானுக்கு சேவை பண்ணிண்டிருந்தாலே போறும்...
நம்மோட வயசு ஏறிண்டே போறதுபோல, பணிவும், பக்தியும், நற்பண்புகளும் கூடவே வளர்ந்துண்டே வரணும். நம்பிக்கை தான் முக்கியம். நம்மால முடியும்னு நினைக்கற வைராக்கியம் தான் முக்கியம். அதுவும் ஆக்கப்பூர்வமா அமைஞ்சுதானா அது லோக க்ஷேமத்துக்கே வழிகாட்டும்...
தீபாவளி, மனசிலே இருக்கற தீய நினைப்புகளையெல்லாம் அழிக்கற நாள்; இதுவரைக்கும் சரி. இனிமே யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்காத நல்ல, சுத்தமான மனசு வேணும்னு நாம பிரார்த்திச்சுண்டு, அப்படி ஒரு நல்ல காரியத்தைக் கொண்டாடறது தான் தீபாவளி... இப்படி பல நன்முத்துக்களை புத்தகம் முழுதும் பார்க்கலாம். குழந்தைகள் மட்டுமல்ல, பெரியவர்களும் படித்துப் பின்பற்ற வேண்டிய புத்தகம்.
–
இளங்கோவன்